செய்திகள்
உயிரிழப்பு

கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேர் பலி

Published On 2021-01-19 15:54 IST   |   Update On 2021-01-19 15:54:00 IST
செங்கல்பட்டு அருகே கல்குவாரி குட்டையில் 2 சிறுமிகள் உள்பட 3 பேர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட காந்தலூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. தற்போது குவாரி இயங்காத நிலையில் அங்கு ராட்சத பள்ளம் உள்ளது.

கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையின் காரணமாக ஆயிரம் அடிக்கும் மேலாக உள்ள குவாரி பள்ளத்தில் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது. இந்த கல்குவாரி குட்டை பிரமாண்ட பரப்பளவில் இருப்பதாலும், தேங்கியுள்ள நீர் காண்பதற்கு ரம்மியமாக இருப்பதாலும் அப்பகுதி திடீர் சுற்றுலாத்தலமாகி பிரபலமானது.

இந்தநிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தமீம் அன்சாரி (வயது 25) மற்றும் அவரது மாமன் மகள் சமீதா (17), அவரது தோழி ஏஞ்சல் (17) உள்ளிட்ட 3 பேர் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளனர்.

இதையடுத்து குளித்து கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில், நீச்சல் தெரியாததால் மேற்கண்ட 3 பேரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் கல்குவாரி குட்டையில் குதித்து உடலை தேடும் பணியில் இறங்கினர். அதைத்தொடர்ந்து, மூழ்கி கிடந்த 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கல்குவாரி குட்டையில் எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் இல்லாததால் ஆபத்தை உணராமல் இங்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் சிலர், குட்டையில் மூழ்கி உயிரிழந்து வருவது தொடர் கதையாக உள்ளது எனவே எந்தவித பாதுகாப்பும் இல்லாத இந்த கல்குவாரி குட்டையில் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. செங்கல்பட்டு அருகே கல்குவாரி குட்டையில் 2 சிறுமிகள் உள்பட 3 பேர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News