செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் அழைப்பு- கவர்னர் தகவல்

Published On 2021-01-17 03:23 GMT   |   Update On 2021-01-17 03:23 GMT
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் அழைப்பு விடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

புதுவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைத்தார்.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது, சுகாதாரத்துடன் செயல்படுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்றி வந்தோம். தற்போது இவற்றுடன் சேர்த்து நோய்த்தடுப்பூசி செயல்முறையை நோக்கி நகர்கிறோம்.

முதல்கட்டமாக 21 ஆயிரத்து 820 சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதன் 2-ம் கட்டத்தில் காவல்துறையினர், வருவாய் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினருக்கு போடப்படும். இந்த தடுப்பூசியை புதுச்சேரி மக்கள் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கியதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தடுப்பூசி போடப்படும்போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கவனிக்கிறோம். இதுதொடர்பாக வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்.

தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி அழைப்பு வழியாக உங்களுக்கு நமது சுகாதாரத்துறையில் இருந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான அழைப்பு வரும். அவ்வாறு அழைப்பு வராதவர்கள் அழைப்பு வரும்வரை காத்திருக்கவும். சுகாதாரத்துறை மூலமாக வெளிவரும் செய்திகளை தொடர்ந்து கவனித்து வரவும்.

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
Tags:    

Similar News