செய்திகள்
ஜேபி நட்டா

ஜே.பி. நட்டா 30-ந்தேதி புதுவை வருகை

Published On 2021-01-16 11:51 IST   |   Update On 2021-01-16 11:51:00 IST
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வருகிற 30-ந்தேதி புதுவைக்கு வருகிறார். அப்போது அனைத்து கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைகின்றனர்.
புதுச்சேரி:

புதுவையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், வேட்பாளராக களம் காண நினைப்பவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசு வழங்கி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

புதுவையில் காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் கவர்னருக்கு எதிராக பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க. தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறது.

பா.ஜனதா மாநிலம் முழுவதும் தாமரை யாத்திரை நடத்தி முடித்துள்ளது. 2-ம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து வரும் 19-ந்தேதி 30 தொகுதியிலும் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

பின்னர் ஒரு வாரத்திற்கு தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டம், பூத் நிர்வாகிகள், கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.

வருகிற 30-ந்தேதி பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா புதுவைக்கு வருகிறார். அப்போது அனைத்து கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதாவில் இணைகின்றனர். ஓய்வுபெற்ற கல்வியாளர்களும் பா.ஜனதாவில் இணைய உள்ளனர்.

பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய மந்திரி அமித்ஷா புதுவைக்கு வருகிறார். அப்போது முதல்- அமைச்சர் வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். பா.ஜனதாவின் அதிரடி அரசியலால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Similar News