செய்திகள்
மறியல் போராட்டம்

புதுவையில் மாஸ்டர் படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன் ரசிகர்கள் மறியல்

Published On 2021-01-13 10:52 GMT   |   Update On 2021-01-13 10:52 GMT
புதுவையில் மாஸ்டர் படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு ரசிகர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினார்கள்.

புதுச்சேரி:

நடிகர் விஜய் நடித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

புதுவை நகரில் சண்முகா, மால் மற்றும் அட்லாப்ஸ் திரையரங்குகளில் மட்டும் மாஸ்டர் படம் வெளியானது. ஆனால், ரசிகர்களுக்கு முன்னரே டிக்கெட் வழங்கப்படவில்லை.

ஆன்லைன் மூலமும் டிக்கெட் பதிவு செய்யப் படவில்லை. இதனால் மாஸ்டர் வெளியான தியேட்டர் முன்பு நேற்று இரவு ரசிகர்கள் திரண்டு இருந்தனர். மேலும், மாஸ்டர் வெளியான திரையரங்குகள் தோறும் ரசிகர்கள் அலைந்து திரிந்தனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரசிகர்கள் டிக்கெட் வழங்காததை கண்டித்தும், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்காததை கண்டித்தும் காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கம் முன்பு அதிகாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினார்கள்.

ஒரு திரையரங்கில் மட்டும் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைத்தது. அங்கும் கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத டிக்கெட் மட்டுமே கொடுக்கப்பட்டதால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

புதுவை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வழக்கமாக வைக்கப்படும் பேனர்கள், கட்அவுட்டுகள் இல்லை.

ஆனால், நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கூடுவதை தடுத்ததால் வழக்கமாக அலைமோதும் கூட்டமில்லை.

சண்முகா திரையரங்கில் மட்டும் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது. படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் பொங்கல் விருந்தாக படம் அமைந்துள்ளதாக மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News