செய்திகள்
அமைச்சர் கந்தசாமி

சட்டசபை வளாகத்தில் அமைச்சர் கந்தசாமி விடிய, விடிய, தர்ணா போராட்டம்

Published On 2021-01-11 08:52 GMT   |   Update On 2021-01-11 08:52 GMT
15 கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் தர கோரி புதுவை சட்டசபை வளாகத்தில் அமைச்சர் கந்தசாமி விடிய, விடிய, தர்ணா போராட்டம் நடத்தினார்.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 8-ந் தேதி முதல் தொடர் தர்ணா போராட்டம் நடந்தது.

துணை ராணுவம் குவிப்பு, போக்குவரத்து பாதிப்பு, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் போராட்டம் நேற்று இரவு 7 மணியுடன் வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தை முடித்து வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது,

பொங்கல் பண்டிகைக்கு பின்பு கவர்னரை கண்டித்து கையெழுத்து இயக்கம், தெருமுனை பிரசாரம், பந்த் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி கவர்னர் கிரண்பேடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். பஞ்சாலைகள், சர்க்கரை ஆலைகள் திறப்பு, ஆதிதிராவிடர்களுக்கு நலத்திட்ட உதவிகள், ரேசன் கடை ஊழியர்களை பணியில் அமர்த்துவது உட்பட 15 அம்ச கோரிக்கைககள் குறித்து நேரில் சந்தித்து விவாதிக்க அனுமதி வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இதற்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்து அனுப்பிய கடிதத்தில், தங்களின் கோரிக்கைகள் தொடர்பான விளக்கம் பெற துறை செயலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தகவல்கள் வந்தவுடன் உங்களை சந்திக்கும் தேதி, நேரம் ஒதுக்கித்தரப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் போராட்டம் முடிந்தவுடன் அமைச்சர் கந்தசாமி சட்டசபை வளாகத்திற்கு சென்றார். சட்டசபை வளாகத்தில் வராண்டாவில் ஒரு நாற்காலி போட்டு அதில் தனி ஆளாக தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

கந்தசாமியின் போராட்டத்தை பற்றி அறிந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி அனந்தராமன், விஜயவேணி ஆகியோர் சட்டசபை வளாகம் வந்து அவருடன் சிறிது நேரம் பேசி சென்றனர்.

இதனையடுத்து, அமைச்சர் கந்தசாமி சட்டசபை வராண்டாவில் தரையில் தனியாக படுக்கை விரித்து தூங்கினார். இரவு முழுவதும் விடிய, விடிய சட்டசபை வளாகத்திலேயே அவர் போராட்டத்தை தொடர்ந்தார்

இன்று காலை எழுந்து சட்டசபை வளாகத்திலேயே வாக்கிங் சென்ற அவர் அங்குள்ள தனது அறையில் குளித்து மீண்டும் வராண்டாவில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார்.

இன்று 2-வது நாளாக அமைச்சர் கந்தசாமியின் தர்ணா தொடர்ந்தது. போராட்டம் குறித்து அமைச்சர் கந்தசாமி கூறும் போது, சமூகநல துறையில் நிலுவையில் உள்ள 15 கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் தரும் வரை எனது போராட்டம் தொடரும் என்றார்.

Tags:    

Similar News