செய்திகள்
தற்கொலை

பெருந்துறையில் விஷ மாத்திரையை தின்று கடை உரிமையாளர் தற்கொலை

Published On 2020-12-26 19:42 IST   |   Update On 2020-12-26 19:42:00 IST
கொரோனா ஊரடங்கு காரணமாக வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் விஷ மாத்திரையை தின்று கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை:

பெருந்துறை பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் விக்ரம் என்கிற கோதண்டராமன் (வயது 36). இவர் அந்த பகுதியில் ஸ்டீம் அயனிங் கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஹர்ஷிதா (11), ரக்‌ஷிதா (5) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து விக்ரம் தன்னுடைய கடையை அடைத்து விட்டார். இதனால் வருமானமின்றி தவித்த அவர் பலரிடம் கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மன உளைச்சல் காரணமாக அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது.

இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டதால் அதை திருப்பி செலுத்த முடியாமல் தவித்தார். இதனால் விக்ரம் மனமுடைந்து நேற்று முன்தினம் விஷ மாத்திரையை தின்று வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விக்ரம் இறந்தார். 

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News