செய்திகள்
கீழப்பழுவூர் அருகே துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி மனு
துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி கீழக்காவட்டாங்குறிச்சி கிராம மக்கள் ஒன்றிணைந்து திருமானூர் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 58 ஆண்டுகள் பழைமை வாய்ந்த துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு 1962-ம் ஆண்டு முதல் 46 ஆண்டுகளாக 6 ஆயிரம் சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த துணை சுகாதார நிலையம் கரைவெட்டி, மேலக்காவட்டாங்குறிச்சி, குந்தபுரம், கீழக்காவட்டாங்குறிச்சி, சேனாபதி, தட்டாஞ்சாவடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் பிரசவத்திற்கு பெரிதும் பயன்பட்டு வந்தது. 2008-ம் ஆண்டு முதல் துணை சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்க்கக்கூடாது என்ற சுகாதார துறை மற்றும் தமிழக அரசின் உத்தரவால், இப்பகுதி கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
துணை சுகாதார நிலையத்தில் கடந்த 12 ஆண்டுகளாக பிரசவங்கள் பார்க்க அனுமதிக்கப்படாததால் கர்ப்பிணிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. எனவே கீழக்காவட்டாங்குறிச்சி துணை சுகாதார நிலையத்தில் முறையாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்து, துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழக்காவட்டாங்குறிச்சி கிராம மக்கள் ஒன்றிைணந்து திருமானூர் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.