செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் (கோப்புப்படம்)

உதயநிதி வாகனத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் வழிமறித்ததால் பரபரப்பு

Published On 2020-12-24 17:09 IST   |   Update On 2020-12-24 17:09:00 IST
அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு பரப்புரை செய்ய வந்த உதயநிதி வாகனத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக-வின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் மாவட்டந்தோறும் பரப்புரை செய்து வருகிறார்.

இன்று  கண்டிராதீர்த்தம் கிராமத்தில் பரப்புரையை முடித்த உதயநிதி ஸ்டாலின், அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு பரப்புரை செய்ய வாகனத்தில் வந்தார். அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சி கொடியுடன் உதயநிதி காரை வழி மறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருமானூரில் பரப்புரைக்காக ஜி.கே. மூப்பனார் அரங்கம் முன் மேடை அமைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அரங்கத்தில் இருந்த ஜி.கே. மூப்பனார் பெயரை அழித்ததாக கூறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் உதயநிதி வாகனத்தை மறித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா கூறுகையில் ‘‘ஜி.கே. மூப்பனாரின் பெயரை அழித்து தி.மு.க. பிரசாரம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?. உதயநிதி உள்பட, திமுக நிர்வாகிகளும் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து திமுக மாவட்டச் செயலாளர் கூறுகையில் ‘‘இது திட்டமிட்ட செயல் அல்ல. அரங்கம் சீரமைக்கும்போது, அல்லது வர்ணம் பூசும்போது பெயர் அழிந்திருக்கலாம்’’ என்றார்.

Similar News