செய்திகள்
ஜவாஹிருல்லா

புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும்- ஜவாஹிருல்லா பேட்டி

Published On 2020-12-23 21:19 IST   |   Update On 2020-12-23 21:19:00 IST
புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
ஈரோடு:

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்து வரும் அ.தி.மு.க. ஆட்சி மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிறது. மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு, அடிமை சேவகம் செய்யும் ஆட்சியாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை மூலம் மாநில அரசுகளின் அனுமதியில்லாமல் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரமுடியும். இதற்கு எதிராக தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மக்களின் நலன் காக்க வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற பாடுபடுவோம். தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சிறப்பான தொகுதிகளை பெறும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது.

அரசு பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை போல, வேளாண் துறையையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News