செய்திகள்
தா.பழூரில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள குடும்பநல மைய கட்டிடத்தை படத்தில் காணலாம்.

தா.பழூரில் இடிந்து விழும் அபாய நிலையில் குடும்பநல மைய கட்டிடம்

Published On 2020-12-23 21:10 IST   |   Update On 2020-12-23 21:10:00 IST
தா.பழூரில் இடிந்து விழும் அபாய நிலையில் குடும்பநல மைய கட்டிடம் உள்ளது. இதை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையம் 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் இந்த சுகாதார நிலையம் முதலில் குடும்பநல மையமாக செயல்பட்டது.

இதற்கான கட்டிடம், குடும்ப நல மையத்திற்கு முதன் முதலில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தின் அருகே புதிய கட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையில் அலுவல் பணிகளுக்கு, மட்டும் பழைய கட்டிடத்தை பயன்படுத்தி வந்தனர்.

பின்னர் அந்த கட்டிடத்தின் அனைத்து சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டு, சேதமடைந்து கட்டிடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்ட பிறகு அலுவல் பணிகளை வேறு கட்டிடங்களுக்கு மாற்றிவிட்டனர். ஆனால் சேதமடைந்த கட்டிடம் இடித்து அகற்றப்படாமல் உள்ளது. சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகள், முதியவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் போன்றோர், பாழடைந்த அந்த கட்டிடத்தின் முகப்பில் உள்ள திண்ணையில் அமர்ந்து ஓய்வு எடுக்கிறார்கள்.

எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில், நோயாளிகள் அமர்ந்து ஓய்வு எடுப்பது அவர்களது உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிபவர்கள், அந்த கட்டிடத்தில் ஓய்வெடுப்பவர்களை பார்க்கும்போது, அங்கே அமராதீர்கள், பாதுகாப்பு இல்லை, என்று அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அங்கு வருபவர்கள் அந்த கட்டிடத்தில் அமரும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி, சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள குடும்ப நல மைய கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News