செய்திகள்
மீன்சுருட்டி அருகே மொபட்- மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஆசிரியர் உள்பட 5 பேர் படுகாயம்
மீன்சுருட்டி அருகே மொபட்- மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஆசிரியர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு ராஜவீதியை சேர்ந்தவர் சின்னதுரை(வயது 49). இவர் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று காலை தனது மகன் கலைக்கோவனுடன் ஜெயங்கொண்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
கங்கை கொண்டசோழபுரம் கிராமம் அருகே வந்தபோது, எதிரே அந்த கிராமத்தை சேர்ந்த பிரகதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் பாண்டுரெங்கன் ஓட்டி வந்தார். அப்போது மொபட்டுக்கு பின்னால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் சந்தைதோப்பு பேரரசி தெருவை சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராகுல்ராஜ், லெனின் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதியதில் எதிரே வந்த சின்னதுரையின் மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதியது.
இதில் 3 வாகனங்களில் வந்தவர்களில் 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் சின்னதுரை, கலைக்கோவன், பாண்டுரெங்கன், ராகுல்ராஜ், லெனின் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து சின்னதுரை கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், விபத்தை ஏற்படுத்தியதாக ஸ்ரீராம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.