செய்திகள்
சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்.

கீழப்பழுவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை

Published On 2020-12-19 08:08 GMT   |   Update On 2020-12-19 08:08 GMT
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத ரூ.1.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வாகனங்களை பதிவு செய்தல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல், பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு வாகன பரிசோதனை மேற்கொண்டு வரி செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் இந்த அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே இந்த அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் லஞ்சம் அதிகரித்துள்ளதாகவும் பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தது.

இந்நிலையில், அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை போலீஸ் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அதிரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

நுழைவாயில் கதவை மூடி சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் உள்ளே இருந்தவர்களை அப்படியே அலுவலகத்தின் ஒரு பகுதியில் அமர வைத்து விட்டு, தொடர்ந்து அலுவலகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் வாகனத்திலும் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத ரூ.1.40 லட்சம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து வெங்கடேசன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News