செய்திகள்
உனிசெட்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடத்தை கலெக்டர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த காட்சி

உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1½ கோடியில் கூடுதல் கட்டிடம் - கலெக்டர் திறந்து வைத்தார்

Published On 2020-12-13 08:14 GMT   |   Update On 2020-12-13 08:14 GMT
உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1 கோடியே 52 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி திறந்து வைத்தார்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் வட்டாரம் நமிலேரி ஊராட்சி உனிசெட்டியில் டைட்டான் நிறுவனம் மூலம் சமூக பொருளாதார மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1 கோடியே 52 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதற்கு டைட்டான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-

உனிசெட்டி கிராமத்தில் ஏற்கனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. மலை கிராமங்களில் உள்ள ஏராளமான மக்கள் இந்த சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உனிசெட்டி சுற்று வட்டார கிராமத்தில் 29,586 மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இருந்த ஆரம்ப சுகாதார நிலையம் குறைவான பரப்பளவு கொண்டது.

கூடுதல் கட்டிடம் தேவைப்பட்ட நிலையில் ரூ.1.52 கோடி மதிப்பில் சமூக பொருளதார மேம்பாட்டு நிதியில் தனியார் மருத்துவமனைக்கு ஈடாக கட்டிடம் இங்கு கட்டப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பாக 2 படுக்கைகள் மற்றும் டைட்டன் நிறுவனத்தின் சார்பில் 10 படுக்கைகள் மேலும் ஒரு நாளைக்கு 100 முதல் 150 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாதத்திற்கு 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 டாக்டர்கள், ஒரு சுகாதார ஆய்வாளர், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என 13 பேர் பணிபுரிவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், நிறுவன பொது மேலாளர் விவேகாந்தன், சி.எஸ்.ஆர். திட்ட இயக்குனர் சங்கர், வெங்கடேஷ், சண்முகம், சுக்லா, வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News