செய்திகள்
வேகமாக நிரம்பி வரும் பெரியகுளம் கண்மாய்.

வேகமாக நிரம்பும் பெரியகுளம் கண்மாய்- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2020-12-05 10:00 GMT   |   Update On 2020-12-05 10:00 GMT
தொடர்மழையினால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் வேகமாக நிரம்புகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இந்த பலத்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள கண்மாய்கள் மற்றும் குளங்கள் நிரம்பி வந்தன. அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அந்த தண்ணீர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு வந்து சேர்ந்தது.

இதனால் பெரியகுளம் கண்மாய் தற்போது நிரம்பும் தருவாயில் உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த கண்மாயில் இருந்து வரும் தண்ணீர் மூலம் 1,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது தொடர்மழை பெய்ததால் பெரியகுளம் கண்மாயில் 70 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. இன்னும் 30 சதவீத தண்ணீர் வந்தால் பெரிய கண்மாய் நிரம்பி விடும்.

ஆனாலும் இந்த 70 சதவீதம் தண்ணீர் சுமார் 4 மாதங்களுக்கு கண்மாயில் தேங்கி நிற்கும். வேகமாக பெரிய குளம் கண்மாய் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News