செய்திகள்
மீனவர்கள் மறியல்

வானூர் அருகே தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் மறியல்

Published On 2020-12-05 07:08 GMT   |   Update On 2020-12-05 07:08 GMT
வானூர் அருகே தூண்டில் வளைவு அமைக்க கோரி 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் பொம்மையார் பாளையத்தில் புதுவை-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பொம்மையார் பாளையத்தில் மீனவர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த கிராமம் கடல்பகுதியை ஒட்டியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு காரணமாக இங்குள்ள வீடுகள் இடிந்தவண்ணம் உள்ளது. எனவே பொம்மையார்பாளையம் மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி தூண்டில்வளைவு அமைக்க ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல்நாட்டப்பட்டது. ஆனால் அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மீனவர்கள் ஆதங்கப்பட்டனர்.

இன்று காலை சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் பொம்மையார் பாளையத்தில் புதுவை-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது தூண்டில்வளைவு அமைக்க கோரி கோ‌ஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய்தங்கம், ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். மறியல் செய்த மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News