செய்திகள்
கொரோனா பரிசோதனை

நரிக்குடி வட்டாரத்தில் இதுவரை 22 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை- அதிகாரி தகவல்

Published On 2020-12-02 09:05 GMT   |   Update On 2020-12-02 09:05 GMT
நரிக்குடி வட்டாரத்தில் இதுவரை 22 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர் கூறினார்.
காரியாபட்டி:

நரிக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில் நடைபெற்றது. யூனியன் துணைத்தலைவர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-

கவுன்சிலர் ஜெயலட்சுமி பேசியதாவது:-

நரிக்குடி யூனியன் திருமாணிக்கனேந்தல், சேதுராயனேந்தல், டி.வேலங்குடி சாலை பணிகள் விரைவில் முடிக்க வேண்டும்.

ஆணையாளர் சுப்பிரமணி:- தற்போது சாலைகளில் முதலில் பாலங்கள் அமைக்கப்பட்டு பின்னர் விரைவில் சாலை பணி முடிக்கப்படும். மேலும் மழை காலம் என்பதால் சாலைகள் விரைந்து செய்ய முடியாத நிலையுள்ளது. விரைவில் சாலை பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கவுன்சிலர் போஸ்:- கிராம ஊராட்சிகளில் தற்காலிக அடிப்படையில் சுகாதார பணிகள் செய்வதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு சம்பளம் யூனியன் அலுவலகம் பொது நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. அவர்கள் எந்த பணி செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. எனவே அவர்கள் என்ன பணி செய்கிறார் என இந்த கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

யூனியன் ஆணையாளர் சுப்பிரமணி:- நரிக்குடி வட்டார மருத்துவ அலுவலர் அவர்களின் பரிந்துரையின் பேரில் தற்காலிக சுகாதார பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதா? வீடுகளின் சுற்றுப்புற சூழல் எப்படி உள்ளது என்பதை அறிந்து செயல்படுத்தி வருகின்றனர்.

நரிக்குடி சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர் கூறியதாவது:- நரிக்குடி வட்டார பகுதிகளில் சுகாதாரபணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. நரிக்குடி வட்டாரத்தில் இதுவரை 22 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர்.
Tags:    

Similar News