செய்திகள்
கலெக்டர் கண்ணன்

மழை பாதிப்பில் இருந்துதோட்டப்யிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்- கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2020-11-28 11:58 GMT   |   Update On 2020-11-28 11:58 GMT
விருதுநகர் மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் பகுதிகளில் தோட்டப்பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கண்ணன் விவரித்துள்ளார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் பகுதிகளில் தோட்டப்பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கண்ணன் விவரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மழையால் வயலில் நீர் தேங்காத வண்ணம் ஆங்காங்கே வடிகால் வசதி அமைத்து மழை நீரை வெளியேற்ற வேண்டும். உபரி நீர் வடிந்த பின்பு நடவு மற்றும் விதைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதிக மழை பொழிவினால் பெரும்பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்திட வாய்ப்புள்ளதால் அறுவடைக்கு தயாராக இருக்கும் மரங்களின் பழங்களை அறுவடை செய்து மரங்களின சுமையை குறைக்கலாம். பசுமைகுடிலின் அடிப்பாகம் கம்பிகளால் இணைத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கதவு, ஜன்னல்களை மூடி உட்பகுதியில் காற்று புகாத வண்ணம் அமைக்க வேண்டும். குடிலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குடிலை சுற்றி வேலி அமைக்கலாம்.

குடிலின் அருகில் பட்டுப்போன மரங்கள் இருந்தால் அதனை அகற்ற வேண்டும். மா, கொய்யா, மாதுளை ஆகிய மரங்களின் கிளைகளை நன்கு கவாத்து செய்ய வேண்டும். இதன் மூலம் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு மரங்கள் சாய்வதை தவிர்க்கலாம். வாழையில் கீழ்மட்ட இலைகளை அகற்ற வேண்டும். காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக முட்டுக்கொடுத்து மரங்கள் சாயாத வண்ணம் பாதுகாக்கலாம்.

மரங்களை சுற்றி மண் அணைக்க வேண்டும். இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்யலாம். வாழை மரங்களில் உள்ள தார்களை அறுவடை செய்யலாம்.

ராஜபாளையம் பகுதிகளில் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் போன்ற நறுமண பயிர்களுக்கு பூஞ்சான நோய்களை தடுக்க சூடோமோனசம் மற்றும் டிரைக்கோ டெர்மா விரிடி தெளிக்க வேண்டும். காய்கறிகள், பந்தல் காய்கறிகள் மற்றும் பூக்கள் போன்றவற்றில் காய்ந்துபோன இலைகளை அகற்றி, வடிகால் வசதி ஏற்படுத்தி பூஞ்சான் உயிர்கொல்லியை இலையில் தெளிக்க வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி வடகிழக்கு பருவ மழையால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News