புதுச்சேரியில் 144 தடை உத்தரவை இன்று மாலை வரை நீட்டித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை வரை நீட்டிப்பு - மாவட்ட கலெக்டர்
பதிவு: நவம்பர் 26, 2020 11:24
கோப்பு படம்.
புதுச்சேரி:
வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உண்டான நிவர் புயல் நேற்றிரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வரையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது. தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் நிவர் புயல் படிப்படியாக வலுவிழந்து வருகிறது.
கனமழை காரணமாக புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பெரும்பாலான இடங்களில் நீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக அவர்கள் வீடுகளில் இருக்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் 144 தடை உத்தரவை இன்று மாலை வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இன்று காலை 6 மணி வரை 144 தடை அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 6 மணி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நிவர் புயல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் 23 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் நீர் தேங்கியும் உள்ளது. இந்த தேங்கிய நீர் கடலில் சென்று வடியவில்லை. இது வடிய காலதாமதம் ஆவதால் புதுச்சேரி நகரப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சில பகுதிகள் மட்டுமே மரங்கள் விழுந்துள்ளன. மீனவ பகுதிகளில் படகுகள், வலைகள் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்றும், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்ய இருக்கிறோம். இதுவரை உயிர் சேதம் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை.
புயல் இரவு நேரத்தில் வந்த காரணத்தினால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் பாதுகாப்பாக இருந்ததால், பாதிப்பு குறைந்துள்ளது. தடைப்பட்ட மின்சாரம் 12 மணி நேரத்திற்குள் கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் படிப்படியாக மின்சாரம் கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
Related Tags :