செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா

Published On 2020-11-23 02:20 GMT   |   Update On 2020-11-23 02:20 GMT
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 5,436 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 15 ஆயிரத்து 762 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது.

15 ஆயிரத்து 452 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2,519 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 54 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 15,782 ஆக உயர்ந்துள்ளது. வழக்கம்போல் மாவட்ட சுகாதாரத்துறையினர் பாதிப்படைந்த பகுதிகளின் விவரங்களை தெரிவிக்கவில்லை.

தமிழக அரசு மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட கூடாது என்று வலியுறுத்தி உள்ள போதிலும் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 1,227 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 2,519 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மாவட்ட மக்கள் நலன் கருதி வலியுறுத்தி வந்த போதிலும் மாவட்ட சுகாதாரத்துறையினர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையே நீடிக்கிறது.

மேலும் நோய் பாதிப்பு ஏற்பட்ட கிராமங்களை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்காமல் தொடர்ந்து அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள மலைப்பட்டி கிராமத்தை மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் நோய் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தன போக்கை கடைபிடித்தால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். எனவே சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News