செய்திகள்
விபத்துக்குள்ளான கார்.

குஷ்பு சென்ற கார் விபத்தில் சிக்கியது

Published On 2020-11-18 04:33 GMT   |   Update On 2020-11-18 08:17 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் விபத்துக்குள்ளானது.
மதுராந்தகம்:

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் முருகன் கடந்த 6-ந்தேதி முதல் வேல் யாத்திரை நடத்தி வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அவரது வேல் யாத்திரை தொடங்கியது. தமிழக அரசு இந்த யாத்திரைக்கு தடை விதித்துள்ள போதிலும் பா.ஜ.க.வினர் தடையை மீறி யாத்திரை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று அவர் திருவண்ணாமலையில் நடந்த வேல் யாத்திரையில் பங்கேற்றார்.

அடுத்த மாதம் 7-ந்தேதி திருச்செந்தூரில் வேல் யாத்திரையை நிறைவு செய்யும் வகையில் ஒவ்வொரு ஊர்களிலும் யாத்திரை நடைபெற்று வருகிறது. இன்று (புதன்கிழமை) கடலூரில் யாத்திரை நடைபெறுகிறது.

நடிகை குஷ்பு இந்த வேல் யாத்திரையில் கலந்து கொள்வது என முடிவு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனது காரில் புறப்பட்டு சென்றார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் நோக்கி அவரது கார் சென்று கொண்டிருந்தது.

மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் சென்ற போது முன்னால் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த கண்டெய்னர் லாரியை குஷ்புவின் கார் முந்தி சென்றது.

அப்போது எதிர்பாராத விதமாக கண் இமைக்கும் நேரத்துக்குள் காரில் இடது பக்கத்தில் கண்டெய்னர் லாரி வேகமாக இடித்தது. இதில் காரின் பின் இருக்கை பகுதி பலத்த சேதமடைந்தது. சிறிது தூரம் கண்டெய்னர் லாரியில் உரசியபடியே குஷ்புவின் கார் சென்றது.

காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த குஷ்பு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். உடனடியாக குஷ்புவின் கார் டிரைவர் முருகன் சாமர்த்தியமாக காரை திருப்பி ஓரமாக நிறுத்தினார்.

இதன் காரணமாக குஷ்பு அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

கண்டெய்னர் லாரி டிரைவரிடம் விபத்து பற்றி விசாரணை நடத்தப்பட்டது. குஷ்புவிடமும் விபத்து பற்றி போலீசார் விவரங்களை கேட்டு அறிந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தமிழக பாரதிய ஜனதா மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குஷ்புவிடம் போனில் தொடர்பு கொண்டு அவர்கள் விபத்து பற்றி விசாரித்தனர்.

சமீபத்தில் பாரதிய ஜனதாவில் இணைந்த குஷ்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்த சிதம்பரம் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டார். கடந்த 6-ந்தேதி முதல் பாரதிய ஜனதா வேல் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில் இதுவரை அந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை.

கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் முதல் முறையாக பங்கேற்பதற்காக இன்று சென்ற போதுதான் அவரது கார் விபத்தில் சிக்கி உள்ளது.

இந்த விபத்து பற்றி குஷ்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து உள்ளார். தன்னை கொல்ல சதி நடந்திருப்பதாகவும், இது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக குஷ்பு அளித்த பேட்டி வருமாறு:-

விபத்து நடைபெற்ற விதத்தை பார்க்கும் போது என் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் போலவே தெரிகிறது. என்னை கொல்வதற்கு சதி நடந்திருப்பதாகவே நான் உணருகிறேன்.

விபத்து பற்றி போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விபத்தில் சிக்கிய போதிலும் குஷ்பு தனது பயண திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி கடலூரில் நடக்கும் வேல் யாத்திரையில் கலந்து கொள்ள அவர் முடிவு செய்தார்.

இதையடுத்து மாற்று கார் வரவழைக்கப்பட்டது. குஷ்பு அதில் ஏறி கடலூருக்கு சென்றார்.
Tags:    

Similar News