செய்திகள்
தேவகோட்டை அருகே ரேஷன்கடை விற்பனையாளரை வெட்டிய 4 பேர் கைது
தேவகோட்டை அருகே கூலிப்படை அமைத்து ரேஷன்கடை விற்பனையாளரை வெட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பூசலாகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் பாஸ்கர் (வயது 50). இவர் மங்கலம் மற்றும் வெங்களூர் ரேஷன் கடைகளில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ந் தேதி மாலை 6 மணி அளவில் பாஸ்கர் ரேஷன் கடையை மூடிவிட்டு வெங்களூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார்.
குலக்குடி அருகே சென்ற போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை போலீசார் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் கடை ஊழியர் பாஸ்கரை வெட்டிய கும்பல் குறித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அது பற்றிய விவரம் வருமாறு:-
பூசலாகுடி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த ராமு என்ற ராமநாதன் என்பவரின் அண்ணன் ஆக்கிரமித்து உள்ளார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசுக்கு பாஸ்கர் புகார் தெரிவித்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராமு கூலிப்படை அமைத்து பாஸ்கரை கொல்ல முயன்றது தெரியவந்தது. ராமுவுக்கு அருணகிரி பட்டினத்தை சேர்ந்த சரிதா(37) என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தி அவரிடம் பாஸ்கரை கொலை செய்ய வேண்டும் என கேட்டு உள்ளார்.
அதற்கு சரிதா ரூ.4 லட்சம் பேசி கூலிப்படை அமைத்து கொடுத்து உள்ளார். அந்த கூலிப்படையினர் பாஸ்கரை வழிமறித்து வெட்டியுள்ளனர். அவர்கள் பாஸ்கரை வெட்டிக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி இருவரும் வந்து உள்ளனர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதனால் படுகாயங்களுடன் பாஸ்கர் உயிர் பிழைத்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து தேவகோட்டை கூத்தாடி முத்து பெரியநாயகி தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் வினோத்குமார் (26), சரிதா (37), ராமு என்ற ராமநாதன் (38), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தலைமறைவான பாவனாக்கோட்டை காளிமுத்துவை தேடி வருகின்றனர்.