செய்திகள்
ஆட்டுச்சந்தை

திருப்புவனம் ஆட்டுச்சந்தையில் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை

Published On 2020-11-10 16:56 IST   |   Update On 2020-11-10 16:56:00 IST
தீபாவளியை முன்னிட்டு திருப்புவனம் ஆட்டுச்சந்தையில் ஒரு ஜோடி ஆடு 40,000 வரை விலை போனது.
திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தீபாவளி பண்டிகைக்காக ஆட்டு சந்தை நடந்தது. இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் ஆடு வாங்க வந்திருந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்புவனம் சுற்று வட்டாரத்தில் இருந்தும் மதுரை, திருச்சி போன்ற மாவட்டத்தில் இருந்தும், வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 20 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது.

இதை வாங்குவதற்காக, உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்திருந்தனர்.  தீபாவளி பண்டிகை வர இருப்பதால் இன்றைய சந்தையில் இறைச்சிக்காக அதிகளவு ஆடுகள் விற்பனையானது. பொதுவாகவே இந்த திருப்புவனம் சந்தையில் ஆடுகள் பண்டிகை காலங்களில் அதிக அளவில் விற்பனை செய்யப்படும்.

இதில் குறைந்தபட்சம், 15,000 இருந்து, அதிகபட்சம், 25000 வரை ஆடுகள் விலை போனது. சுமார் 80 கிலோ எடையுள்ள, ஒரு ஜோடி உயர் ரக வெள்ளாடு, 40,000 வரை விலை போனது. இதுகுறித்து ஆட்டுச்சந்தைக்கு வந்திருந்த வியாபாரிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்புவனம்  ஆட்டுச்சந்தையில் 2 கோடி முதல் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது என்றனர்.

மேலும் இந்த சந்தையில்தான் அனைத்து ரக ஆடுகளும் கிடைக்கும். அதனால்தான் வியாபாரிகள் மற்றும் ஆடு வாங்குபவர்கள் என அனைவருமே இந்த சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News