செய்திகள்
திருட்டுபோன ஐம்பொன் முருகன் சிலை (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)

ஈரோட்டில் ஐம்பொன் முருகர் சிலை திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2020-08-15 10:00 GMT   |   Update On 2020-08-15 10:00 GMT
ஈரோட்டில் ஐம்பொன் முருகர் சிலையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு:

ஈரோடு சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரம் வீதியில் வெற்றி விநாயகர் கோவில் உள்ளது இந்த கோவிலில் மூலவர் விநாயகரும், அவருக்கு அருகில் ஒரு அடி உயரம் உள்ள ஐம்பொன்னாலான முருகர் உற்சவர் சிலையும் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக கோவில் மூடப்பட்டு இருந்தது.

கோவில் பூசாரி, கால பூஜைகள் மட்டும் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி பகுதியில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் உள்ள கோவில்களை திறக்கலாம் என அரசு அனுமதி அளித்தது. அதன்படி வெற்றி விநாயகர் கோவில் மீண்டும் திறக்கப்பட்டு, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு வழக்கம்போல் பூட்டி சென்றார். நேற்று அதிகாலை மீண்டும் கோவிலை திறப்பதற்காக பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் உள்ள ஐம்பொன்னாலான ஒரு அடி உயரம் உள்ள முருகர் சிலை மாயமானதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

போலீசார் விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கிரில் கேட் ஓட்டை வழியாக ஐம்பொன்னால் ஆன முருகர் சிலையை தூக்கி சென்றது தெரிய வந்துள்ளது. திருட்டுப்போன முருகர் சிலையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐம்பொன் சிலையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News