செய்திகள்
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.

டீசல் மானியத்தை உயர்த்தக் கோரி காரைக்காலில் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்

Published On 2020-07-22 21:17 IST   |   Update On 2020-07-22 21:17:00 IST
டீசல் மானியத்தை உயர்த்தி வழங்கக் கோரி காரைக்காலில் விசைப் படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.
காரைக்கால்:

காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரிமேடு உள்பட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 400 விசைப் படகுகள், காரைக்காலில் தங்கி மீன் பிடித்துவரும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50 விசைப்படகுகள் என 450 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

டீசல் விலை உயர்வு மற்றும் கொரோனாவால் வெளி மாநில மீன் வியாபாரிகள் காரைக்காலுக்கு வராமல் போனதால் ஏற்பட்ட வர்த்தக பாதிப்பால், மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவ கிராம விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த போராட்டம் குறித்து கிளிஞ்சல்மேடு மீனவ பஞ்சாயத்தார்கள் கூறியதாவது:-

சுமார் 3 மாதத்துக்குப்பின் கடந்த மாதம்தான் மீன் பிடிக்கச் சென்றோம். இந்த நேரத்தில் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் மார்க்கெட்டுகள் மூடப்பட்டதால், வியாபாரிகள் காரைக்கால் வருவதில்லை. அதனால், பிடித்த மீன்களை விற்க முடிவதில்லை. இதனால் பலத்த நஷ்டத்துக்குள்ளாகி உள்ளோம்.

இக்கட்டான சூழ்நிலையில் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதற்கான மானியத்தை அரசு உயர்த்தி தரவேண்டும். மீன் வியாபாரிகளுக்கு தடையற்ற போக்குவரத்தை ஏற்படுத்தவேண்டும். அனைத்து மீனவர்களுக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும். அதுவரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். பைபர் படகு மீனவர்கள் வழக்கம் போல் தொழிலில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News