செய்திகள்
முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் அடைப்பு: புதுச்சேரிக்கு நடந்தே சென்று மதுவாங்கிய கடலூர் மதுபிரியர்கள்
முழு ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இருப்பினும் புதுச்சேரிக்கு நடந்தே சென்று மதுபாட்டில்களை வாங்கிய கடலூர் மதுபிரியர்கள் தென்பெண்ணையாறு, கரை பகுதியில் அமர்ந்து குடித்தனர்.
கடலூர்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. கடைகள் முன்பு சானிடைசர் வைக்க வேண்டும். முக கவசம் அணிந்து வந்தால் தான் மதுபாட்டில்களை கொடுக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை கடைபிடித்து ஊழியர்கள் மதுபிரியர்களுக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு முன்பு குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே கடை திறந்து இருக்கும் என்பதால் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். தற்போது இரவு 8 மணி வரை கடை திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது.
அதேவேளையில் கடலூரை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்காமல் இருந்த போது, அங்குள்ள மதுபிரியர்கள் கடலூரில் வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். பின்னர் அங்கு மதியம் 2 மணி வரை மட்டும் கடைகள் திறக்கப்பட்டு மது, சாராயம் விற்பனை நடைபெற்றது. விலை குறைவு என்ற நிலையில் தற்போது கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே மாதிரியாக விலை அதிகமாக இருப்பதால் கடலூரில் இருந்து மதுபிரியர்கள் புதுச்சேரிக்கு செல்வதை குறைத்து விட்டனர். தற்போது அங்கும் இரவு 8 மணி வரை மதுக்கடைகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் முழு ஊரடங்கு கிடையாது. இதனால் கடலூரில் உள்ள மதுபிரியர்கள் புதுச்சேரிக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கினர். ஆனால் வாகனங்களில் செல்ல போலீசார் கெடுபிடி விதித்ததால் பெரும்பாலான மதுபிரியர்கள் கடலூர் தென்பெண்ணையாற்றின் குறுக்கே நடந்தே புதுச்சேரிக்கு சென்று மதுபாட்டில்கள், சாராயத்தை வாங்கி குடித்தனர். சிலர் சைக்கிளில் சென்று மதுபாட்டில்களை வாங்கி குடித்தனர். பெரும்பாலான மதுபிரியர்கள் தென்பெண்ணையாற்றிலும், அதன் கரையோரத்திலும் அமர்ந்து மது, சாராயம் குடித்ததை பார்க்க முடிந்தது. தென்பெண்ணை ஆறு மதுபார் போன்று இருந்தது. புதுச்சேரிக்கு நடந்தும், சைக்கிளில் சென்றவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். அவர்களை துரத்தி விட்டும் அவர்கள் யாரும் கேட்கவில்லை. சிலர் புதுச்சேரிக்கு தான் செல்கிறோம் என்று போலீசாரிடம் வாக்குவாதமும் செய்தனர்.