செய்திகள்
கோப்புபடம்

மோட்டார்சைக்கிள் மோதி சிறுவன் பலி - வாலிபருக்கு 6 மாதம் சிறை

Published On 2020-07-19 18:23 IST   |   Update On 2020-07-19 18:23:00 IST
மோட்டார்சைக்கிள் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து வாலிபருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
காரைக்கால்:

காரைக்கால்மேடு சுனாமி நகர்-மகாராஷ்டிரா நகர் சந்திப்பில் கடந்த 14-1-2011-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் சந்துரு சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அண்ணுசாமி வாய்க்கால் தெருவைச்சேர்ந்த பெனில் ஸ்டான்லி நிர்மல்(19) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சந்துரு சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து குணபாலன் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெனில் ஸ்டான்லி நிர்மலை கைது செய்து காரைக்கால் மாவட்ட கூடுதல் உரிமையியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் கூடுதல் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு நீதிபதி செந்தமிழ்செல்வன் தீர்ப்பு அளித்தார். அப்போது விபத்தை ஏற்படுத்திய பெனில் ஸ்டான்லி நிர்மலுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அபராதம் கட்ட தவறினால், மேலும் ஒரு மாத சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

Similar News