செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

ராஜஸ்தான் மாநில விவகாரம்- டுவிட்டரில் நாராயணசாமி கருத்து

Published On 2020-07-19 07:05 GMT   |   Update On 2020-07-19 07:05 GMT
ராஜஸ்தான் மாநில விவகாரம் தொடர்பாக புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி:

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக அசோக் கெலாட் இருந்து வருகிறார். அங்கு துணை முதல்-மந்திரியாகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் சச்சின் பைலட் இருந்து வந்தார். இவர்களுக்கிடையே ஏற்பட்ட பனிப்போர் நீறுபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் கட்சி மேலிடம் அதிர்ச்சி அடைந்தது. உடனே சச்சின் பைலட்டை தொடர்பு கொண்டு சமரச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதில் உடன்பாடு எட்டாததையடுத்து சச்சின் பைலட் வகித்து வந்த துணை முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதுகுறித்து புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் ‘சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பும் நேரம் இது. அகில இந்தியா காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கட்சிக்காக சச்சின் பைலட் உழைத்துள்ளதை அங்கீகரிக்கின்றோம்’ இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News