செய்திகள்
முன்னாள் எம்பி ராமதாஸ்

பட்ஜெட்டில் தேவையில்லாத அறிவிப்புகள் கூடாது- முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2020-07-19 12:30 IST   |   Update On 2020-07-19 12:30:00 IST
வாக்கு வங்கியை மேம்படுத்த பட்ஜெட்டில் தேவையில்லாத அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என முன்னாள் எம்.பி. ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி அ.தி.மு.க. இணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் நாராயணசாமி சமர்ப்பிக்கும் பட்ஜெட் கடும் சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்நோக்கியுள்ளதாக இருக்கும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் இக்கட்டான சூழ்நிலையில் தேர்தலை எதிர்நோக்கிய பட்ஜெட் என்பதால் கவர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள ரூ.9 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இடைக்கால பட்ஜெட்டில் செலவு செய்த ரூ.2,042 கோடியை கழித்து மீதமுள்ள ரூ.6,958 கோடி தான் இருக்கும். இதில் 8 மாதங்களுக்கு அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், கடன் அதற்கான வட்டி திருப்பிச்செலுத்துதல், மானியம் வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்படும். மீதமுள்ள ரூ.958 கோடியில் இதர செலவுக்கு இருக்கும். இந்த குறைந்த நிதியில் தேர்தல் நோக்கில் கவர்ச்சி திட்டங்களை அறிவித்துவிட்டு புதுச்சேரியை மேலும் கடனாளி ஆக்கிவிடக் கூடாது. பொது நோக்கோடும் மாநில மற்றும் மக்கள் நலனை மேம்படுத்தும் வகையிலும் செயல்பட வேண்டும். வாக்கு வங்கியை மேம்படுத்த அடுத்த 8 மாதங்களில் செயல்படுத்த முடியாத தேவையில்லாத அறிவிப்புகளை வெளியிடக்கூடாது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சித்த மருத்துவமனை அமைப்பது, டாக்டர்கள், செவிலியர்கள், ஆஷா ஊழியர்களை பணி அமர்த்தவும் மருந்துகள், மருந்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக ரூ.150 கோடி ஒதுக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் பல மாதங்களாக சம்பளம் பெறாத ஊழியர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். மின்துறையைத் தனியார் மயமாக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த அரசின் மீதான அதிருப்தியை குறைக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமையவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News