செய்திகள்
கவுந்தப்பாடியில் வணிகர் ஒருவருக்கு கடன் உதவியை அமைச்சர் வழங்கியபோது எடுத்த படம்.

ஆற்றில் சாயக்கழிவு கலப்பது 99 சதவீதம் தடுக்கப்பட்டு உள்ளது- அமைச்சர் பேட்டி

Published On 2020-07-05 07:56 GMT   |   Update On 2020-07-05 07:58 GMT
ஆற்றில் சாயக்கழிவு கலப்பது 99 சதவீதம் தடுக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் சிறு வணிகர்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் கிருஷ்ணராஜ், மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன், சரக துணைப்பதிவாளர் கந்தராஜா, முதன்மை வருவாய் அதிகாரி அழகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு 42 சிறு வணிகர்களுக்கு கடன் உதவியை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவு வங்கி மூலமாக வணிகக்கடன், நகைக்கடன் போன்றன வழங்கப்பட்டு வருகிறது. நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள மக்களே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.

ஆறுகளில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் இரவு, பகலாக ரோந்து சென்று வருகிறார்கள். அப்போது சாயக்கழிவு கலப்பது தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அதனால் ஆறுகளில் சாயக்கழிவு கலப்பது 99 சதவீதம் தடுக்கப்பட்டு உள்ளது சாயக்கழிவு கலப்பது தெரியவந்தால் 4 மணிநேரத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆலை மூடப்படும். ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் காவிரி ஆற்றில் சாயக்கழிவு கலப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளதால், மாவட்ட கலெக்டர்கள் உரிய ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

பொதுமக்கள் பயன்படுத்தி தூக்கி வீசப்படும் முககவசங்களை துப்புரவு பணியாளர்கள் அகற்றி எரித்து விடுகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் சரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வரதராஜ், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News