செய்திகள்
காலிங்கராயன் அணைக்கட்டு

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

Published On 2020-07-02 14:37 GMT   |   Update On 2020-07-02 14:37 GMT
காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானி:

காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி வரை 10 மாதங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த பாசன பகுதியில் நெல், வாழை, கரும்பு, மஞ்சள் ஆகிய பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பவானிசாகர் அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு மதகுகளை திருகி தண்ணீரை திறந்து விட்டனர். பின்னர் அவர்கள் வாய்க்காலில் சீறி பாய்ந்த தண்ணீரில் மலர் தூவினார்கள். குடிநீர் தேவை, நிலுவையில் உள்ள பயிர்களை காப்பாற்றுதல் உள்ளிட்டவற்றுக்காக 28-10-2020 அன்று வரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி தலைவர் மகேஸ்வரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் குமார், காலிங்கராயன் பாசன சங்க தலைவர் வேலாயுதம், காலிங்கராயன் விவசாயிகள் சங்க தலைவர் ரமேஷ், உழவர் விவாதக்குழு மாவட்ட செயலாளர் வெங்கடாசலபதி, மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சிக்கன கடன் சங்க தலைவர் கணேஷ்குமார், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News