செய்திகள்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

கொரோனா பாதிப்பு நீடித்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்- சுகாதாரத்துறை அமைச்சர்

Published On 2020-06-12 06:32 GMT   |   Update On 2020-06-12 06:32 GMT
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது இனியும் நீடித்தால் புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவின் தளர்வுகள் விலக்கி கொள்ளப்பட்டன. இந்த நிலையில் புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த மாதத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகிவிடும். தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. முத்தியால்பேட்டையை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் அரசு சார்பில் பாதுகாப்பாக தகனம் செய்யப்படும்.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அதனை பின்பற்றி புதுச்சேரியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த்குமார் பாண்டா, இயக்குனர் மோகன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

அதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளையும், வெளிப்புற சிகிச்சைக்காக வரும் நோயாளிகளையும் தனித்தனியாக அமரவைத்து பரிசோதனை செய்து அனுமதிக்குமாறு டாக்டர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News