செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

மின்துறை ஊழியர்களுடன் நாராயணசாமி பேச்சுவார்த்தை- போராட்டங்கள் தள்ளிவைப்பு

Published On 2020-06-10 12:07 GMT   |   Update On 2020-06-10 12:07 GMT
புதுவையில் மின்துறை ஊழியர்களுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டக்குழுவினர் போராட்டங்களை தள்ளி வைத்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சங்க நிர்வாகிகளை அழைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சட்டசபை கமிட்டி அறையில் நடந்த பேச்சு வார்த்தையில் தலைமைச் செயலர் அஸ்வனிக்குமார், மின்துறை செயலர் தேவேஷ்சிங், கண்காணிப்பு பொறியாளர்கள் முரளி, சண்முகம், ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவின் தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலர் வேல்முருகன், பொருளாளர் மதிவாணன், ஆலோசகர் ராமசாமி, செயல் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என போராட்டக்குழுவின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

பொதுமக்கள் பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்த வேண்டாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போராட்டக்குழுவின் நிர்வாகிகள் கூறும்போது, புதுவையில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்குவதை அரசு ஏற்காது என முதல்-அமைச்சரும், அமைச்சரும் தெரிவித்தனர். இதுகுறித்து, பிரதமர், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் அனுப்ப உள்ளதாகவும் முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவும் உறுதி அளிக்கப்பட்டது. எனவே போராட்டங்களை வருகிற 18-ந்தேதி வரை தள்ளிவைப்பது என முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.


Tags:    

Similar News