செய்திகள்
இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க வேண்டாம்- கலெக்டர் உத்தரவு
வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க வேண்டாம் என கலெக்டர் அருண் உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனா பரவாமல் தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தநிலையில் கலெக்டர் அலுவலகத்தில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பதை தீவிரப் படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் அருண் தலைமை தாங்கினார்.
இதில் போலீஸ் அதிகாரிகள், தாசில்தார்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாநில எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது வெளியூர்களில் இருந்து வருபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவருடைய வீட்டில் நோட்டீஸ் ஒட்டி, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகப்படும் நிலையில் அவர்களை மாவட்டத்துக்குள் அனுமதிக்கக் கூடாது. அவர்களை கண்காணிப்பு மையத்தில் வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னரே அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க வேண்டாம் என கலெக்டர் அருண் உத்தரவிட்டார்.