செய்திகள்
மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள் - கோப்புப்படம்

விக்கிரமங்கலம் பகுதியில் மும்முனை மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்

Published On 2020-05-16 09:59 GMT   |   Update On 2020-05-16 09:59 GMT
விக்கிரமங்கலம் பகுதியில் மும்முனை மின்சாரம் இன்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் வீட்டுஉபயோக பொருட்களும் பழுதடைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தை சுற்றியுள்ள முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான் ஆகிய பகுதிகளில் கோடை உழவு பணி மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களாக முன்முனை மின்சாரம் சரியாக வினியோகம் செய்யாதால் விவசாயிகள் செய்துள்ள கோடை உழவு பணி மற்றும் காய்கறிகள் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம் குறைவாக வருவதால் மின்மோட்டார் இயங்க வில்லை. இதனால் விவசாயிகள் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மிக்சி, கிரைண்டர், குளிர்சாதனபெட்டி போன்ற வீட்டு உபயோக பொருட்களும் மின் அழுத்த குறைபாடு காரணமாக சரியாக இயங்காமல் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. மேலும் அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஊராட்சி மும்முனை மின் மோட்டார்களும் சரியாக இயங்காததால் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

தற்போது கோடைகாலம் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சரியான அளவு மின்சாரம் வந்தாலே ஆழ்துளை கிணறுகளில் அமைக் கப்பட்டுள்ள மின் மோட்டார்களில் இருந்து குறைந்த அளவு தண்ணீரே வரும். மேலும் இப்பகுதி மக்களும், கால்நடைகளும் போதுமான அளவு தண்ணீர் இன்றி தவித்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக மும்முனை மின்சாரத்தை சரியாக வழங்கிட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News