செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

மராட்டியத்தில் இருந்து அரியலூர் வந்த 22 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

Published On 2020-05-11 18:44 IST   |   Update On 2020-05-11 18:44:00 IST
மராட்டியத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த 22 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அரியலூர்:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை என்ற நிலை இருந்தது. சென்னையில் இருந்து அரியலூர் வந்த ஒரு பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வந்த நாட்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்தது.

இதற்கிடையே சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதை தொடர்ந்து அங்கு வேலை பார்த்த அரியலூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். அதன்பின்னர் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று வரை மாவட்டத்தில் மொத்தம் 275 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே மாவட்டத்தில் மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 தொழிலாளர்கள் மராட்டிய மாநிலத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் ரெயில் மூலம், அங்கிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் 22 பேரும் விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழு வினரால் கண்காணிப்பட்டு வருகின்றனர்.

Similar News