செய்திகள்
முடிதிருத்தம்

ஊரடங்கு முடியும் வரை ஜவுளி-சலூன் கடைகள் திறக்க அனுமதியில்லை- கலெக்டர் கதிரவன் தகவல்

Published On 2020-05-09 19:16 IST   |   Update On 2020-05-09 19:16:00 IST
ஊரடங்கு முடியும் வரை நகைக்கடைகள் அனைத்து வகையான துணி கடைகள் மற்றும் அழகு நிலையங்கள், சலூன் மற்றும் ஸ்பா கடைகள் திறக்க அனுமதியில்லை என்று கலெக்டர் கதிரவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்ததன் பயனாக ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறியது. தொடர்ந்து இங்கு நோய் தொற்றுக் இல்லாததால் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியது.

ஆனால் அரசு இதற்கான அறிவிப்பை இன்னும் முறையாக அறிவிக்கவில்லை. ஈரோடு மாவட்டத்தில் சில தளர்வு, நிபந்தனைகளுடன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி தனிக்கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இதில் தெளிவான அறிவிப்பு இல்லாததால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் ஒரு சில இடங்களில் திறக்கப்பட்ட கடைகளை போலீசார் மூட உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வணிகர்கள், வியாபாரிகள் குழப்பமான நிலையில் இருந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தெளிவான விளக்கம் அளித்து எந்தெந்த கடைகள் செயல்பட வேண்டும். எந்தெந்த கடைகள் செயல்படக்கூடாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் ஊரடங்கு முடியும் வரை எந்தெந்த கடைகள் செயல்பட வேண்டும். எந்தெந்த கடைகள் செயல்படக்கூடாது என்பது குறித்து செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் குளிர்சாதனங்களுடன் கூடிய கடைகள், நகைக்கடைகள் அனைத்து வகையான துணி கடைகள் மற்றும் துணி மார்க்கெட், டீக்கடை, குளிர்பானக் கடை, அழகு நிலையங்கள், சலூன் மற்றும் ஸ்பா கடைகள், டிபார்ட் மெண்டல் ஸ்டோர்ஸ், மார்கெட் காம்ப்ளெக்ஸ், உடற்பயிற்சி நிலையம், விளையாட்டு திடல், நீச்சல் குளம், திரையரங்குகள், தங்கும் விடுதி, மதுக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத்தலங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிறுவனங்கள் ஆகிய கடைகள் ஊரடங்கு முடியும் வரும் மே 17-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை இயங்க அனுமதி கிடையாது.

அதேபோல் ஹார்டுவேர் சிமெண்ட், உலோக கடைகள், கட்டுமான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், ஆட்டோமொபைல், புத்தக விற்பனை நிலையம், சானிடரி வேர், மின் சாதன விற்பனைக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மினி மோட்டார் பழுது, கண்கண்ணாடி விற்பனை கடைகள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மளிகை கடை, மருந்து கடைகள், உணவகங்கள் (பார்சல் மட்டும்), ஸ்டூடியோ, பேக்கரி, அச்சகங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சர்வீஸ் சென்டர், இறைச்சிக் கடைகள் (வெளியிலிருந்து வெட்டி பார்ச்சல் செய்யப்பட்ட) இந்த கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாள்ர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முகக்கவசம் அணிந்து வருவதை கடையின் உரிமையாளர், பணியாளர் உறுதி செய்ய வேண்டும்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர் மேற்படி நிபந்தனையை பின்பற்றாமல் இருந்தால் கடையின் உரிமையாளர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடையின் நுழைவாயில் கிருமிநாசினி மற்றும் சோப் போன்றவை கைகளை கழுவ கண்டிப்பாக வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு மூலம் ஈரோடு மாவட்டத்தில் சில நாட்களாகக் குழம்பி வந்த நிலை தற்போது மாறியுள்ளது.

Similar News