செய்திகள்
கொரோனா வைரஸ்

பெருந்துறையில் சொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ் பெற குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

Published On 2020-05-05 17:52 IST   |   Update On 2020-05-05 17:52:00 IST
தற்போது கொரோனாவின் தாக்கம் உள்ள நிலையில் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல இ-பாஸ் பெற வடமாநில தொழிலாளர்கள் பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெருந்துறை:

பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஆயிக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது அனைத்து நிறுவனங்களும் இயங்க தடை விதிக்கபட்ட நிலையில் வடமாநில தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்து தவித்து வந்தனர். இந்த நிலையில் இங்கு தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் கணக்கீடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதற்காக அவர்களின் விவரங்களை கொண்டு பூர்த்தி செய்யப்பட்ட இ- பாஸ் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த இ-பாஸ் அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையங்கள் மூலம் வழங்க முடிவு செய்யபட்டது. இது குறித்து தகவல் அறிந்த வட மாநில தொழிலாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

காலை 10 மணியளவில் இ-சேவை மையம் திறக்கப்பட்ட பின்னர் அங்கு சர்வர் வேலை செய்யாதது தெரிய வந்தது. இது குறித்து தாசில்தாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சர்வர் இயக்கத்திற்கு வந்த பின்னர் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் காத்து நின்ற வடமாநிலத் தொழிலாளர்கள் ஏக்கத்துடன் திரும்பி சென்றனர்.

Similar News