செய்திகள்
கோப்பு படம்

ஈரோட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல 1,100 பேர் பதிவு

Published On 2020-05-05 15:04 IST   |   Update On 2020-05-05 15:04:00 IST
ஈரோட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல 1,100 பேர் பதிவு செய்து உள்ளனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

இது போல் தோல் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை, செங்கல் சூளை, கட்டிட பணி என குடும்பங்களாகவும், தனித் தனியாகவும், குழுக்களாகவும் தங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி முடங்கி உள்ளனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளி மாநிலம் செல்ல விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கடந்த 2 நாட்களாக இதற்கான விண்ணப்பம் பெறப்படுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர்.

விண்ணப்பத்தில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற சொந்த விலாசத்துக்கான ஆவண நகல் பெறப்படுகிறது. இது தவிர அந்த தொழிலாளர் பணிபுரியும் நிறுவன முகவரி அவர் எந்த மாவட்டத்தில் இருந்து எந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்ற விவரம் அவரது வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் தரப்படுகின்றன.

ஈரோட்டில் பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

ஈரோட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல 1,100 பேர் பதிவு செய்து உள்ளனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் வட மாநிலத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

மாநில வாரியாக விண்ணப்பங்கள் பிரிக்கப்பட்டு பதிவு செய்யப்படும். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது செல்லும் வழியில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பதிவு செய்திருந்தால் ஈரோடு அல்லது திருப்பூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். அல்லது கேரளா உள்ளிட்ட பிற பகுதியில் இருந்து செல்லும் ரெயிலில் இருக்கும் காலியிடங்களுக்கு ஏற்ப இவர்கள் அனுப்பி வைக்கபடுவார்கள். சிறப்பு ரெயில் இயக்கப்படும் போது அவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News