செய்திகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்சில் ஏற்றிய போது எடுத்த படம்.

செந்துறை அருகே மேலும் 2 பேருக்கு கொரோனா - பீதியில் கிராம மக்கள்

Published On 2020-05-04 18:20 IST   |   Update On 2020-05-04 18:20:00 IST
செந்துறை அருகே மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்து காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வேன், லாரிகளில் சொந்த ஊர்களுக்கு வந்தனர். இதில் செந்துறை அருகே உள்ள நமங்குணம், சொக்கநாதபுரம், சிறுகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டத்திற்கு முதல் கொரோனா தொற்று சென்னையில் இருந்து வந்த பெண் ஒருவருக்கும், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த நபர் ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சையை தொடர்ந்து அவர்கள் குணமடைந்தனர்.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்த அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பெரியாகுறிச்சி, நத்தகுழி நல்லான் காலனியை சேர்ந்த 2 கூலி தொழிலாளர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களை சுகாதாரத்துறையினர் நேற்று அதிகாலையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறையினர் அப்பகுதி மக்களிடம் சளி, ரத்த மாதிரிகளை எடுத்து கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் 27 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 2 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர்.

Similar News