செய்திகள்
கரும்பு

சென்னிமலை பகுதியில் கரும்பு வெட்ட முடியாமல் விவசாயிகள் அவதி

Published On 2020-05-02 17:22 IST   |   Update On 2020-05-02 17:22:00 IST
ஊரடங்கு உத்தரவு காரணமாக ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கரும்பு வெட்ட முடியாமல் விவசாயிகள் அவதியடைந்தனர்.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுற்றுவட்டார கிராம பகுதியில் 300 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது கரும்பு வெட்டுதவற்கான சீசன் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூர் ஆட்கள் இன்னும் வந்து சேரவில்லை.

சமீபத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி சுமார் 30 தொழிலாளர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து சென்னிமலை பகுதிக்கு வந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முக கவசங்கள் அணியாமலும் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டதால் சென்னிமலை போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து பின்னர் அவர்களது சொந்த ஊருக்கே அனுப்பி வைத்தனர்.

அதே ஆட்கள் வெட்டி போடப்பட்ட கரும்புகள் வேறு ஆட்கள் மூலம் லாரியில் ஏற்றி ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது கரும்பு வெட்டுவதற்கு ஆட்கள் இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், சென்னிமலை பகுதியில் தற்போது தான் கரும்பு வெட்டுவதற்கான சீசன் தொடங்கியுள்ளது. இப்போது தொழிலாளர்கள் இருந்தால் தான் ஒவ்வொரு தோட்டமாக கரும்புகளை வெட்டுவதற்கு சரியாக இருக்கும். ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூர் தொழிலாளர்கள் யாரும் வரவில்லை. நாங்கள் வங்கியிலும், வெளியிலும் கடன் வாங்கித்தான் கரும்பு பயிரிட்டுள்ளோம். அதனால் ஊரடங்கு சட்டத்தை மதித்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கரும்பு வெட்ட வரும் தொழிலாளர்களை அரசு அனுமதிக்க வேண்டும் என்றனர்.

Similar News