செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் இன்று டிஸ்சார்ஜ்

Published On 2020-04-28 16:46 IST   |   Update On 2020-04-28 16:46:00 IST
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் முழுமையாக குணமடைந்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 70 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 65 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினார்கள். முதியவர் ஒருவர் இறந்தார்.

தற்போது பெருந்துறை மருத்துவமனையில் 4 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதி 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த 12 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தபட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை யாருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் முழுமையாக குணமடைந்து விட்டனர். அவர்கள் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.

அவர்களை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பழங்கள் மற்றும் பூங்கொத்து கொடுத்து வழி அனுப்பி வைக்கிறார்கள்.

14 நாட்கள் வரை புதியதாக கொரோனா தொற்று இல்லாவிட்டால் தற்போது சிகப்பு மண்டலத்தில் உள்ள ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் ஊரடங்கில் தற்போதுள்ள கடுமையான கட்டுப்பாடுகளில் இருந்து ஒரு சிலவற்றுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News