இலவச அரிசி வழங்குவதை அதிகாரிகள் காலம் கடத்துகின்றனர்- வைத்திலிங்கம் எம்பி குற்றச்சாட்டு
புதுச்சேரி:
புதுவை எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் அறிவித்தபடி புதுவைக்கான அரிசி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. அரிசி வந்து ஒரு மாதமாகியும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. 20 சதவீதத்தினருக்கு மட்டுமே அரிசி வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு உதவும் எண்ணத்தை முறியடிக்கும் விதமாக தலைமை அதிகாரிகள், கவர்னர் செயல்பட்டு வருகின்றனர். மீதமுள்ள மக்களுக்கு எப்போது அரிசி வழங்கப்படும் என தெரியவில்லை. இது மிகவும் வேதனையாக உள்ளது.
அரிசியை வழங்க தயக்கம் காட்டும் கவர்னருக்கு தலைமை செயலாளர் உறுதுணையாக உள்ளார். அமைச்சர்கள் கேட்டாலும் சரியான பதில் தருவதில்லை. அரிசி கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் செல்லும் கொடுமையான நிலையை அதிகாரிகள் செய்கின்றனர். அரிசி பேக்கிங் செய்ய எப்படி டெண்டர் விடப்பட்டது? யார் முடிவு செய்தது? என தெரிவிக்க வேண்டும்.
அரிசி விநியோகத்தை முழுமையாக செய்யாத அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன். இதுகுறித்து உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ளேன். மாநில அரசு ரூ.2 ஆயிரம் அனைத்து ரேஷன்கார்டுக்கும் வழங்கியது. இதில் சந்தேகம் உள்ளது. அதிகாரிகள் பணம் செலுத்தியது தொடர்பாக விளக்கம் தர வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 3.75 லட்சம் பேருக்கு பணம் கட்டுகிறோம். ஆனால் 1.25 லட்சம் பேர் மட்டுமே அந்த விலாசத்தில் உள்ளனர். ஆளே இல்லாதவர்களுக்கு பணம் கட்டும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.