25 நாட்களுக்கு பிறகு மீண்டும் புதுவை-திண்டிவனம் நெடுஞ்சாலை மொரட்டாண்டி சுங்கசாவடி திறப்பு
புதுச்சேரி:
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுதும் உள்ள சுங்க சாவடிகள் மூடப்பட்டன.
ஊரடங்கில் தற்போது தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் சுங்க சாவடிகளில் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன. புதுச்சேரி திண்டிவனம் சாலையில் உள்ள மொரட்டாண்டி சுங்கச்சாவடி ஊழியர்கள் 25 நாட்களுக்கு பிறகு இன்று பணிக்கு திரும்பினார்கள்.
இவர்களுக்கு கையுறை, முக கவசம், சனிடைசர் போன்றவை அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் இவர்கள் கிருமிநாசினி கொண்டு கை கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களின் டயர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக அளவிலான வாகனங்கள் சுங்கச் சாவடியில் காணப்பட வில்லை.
காலையில் கனரக வாகனங்கள் காய்கறி, மளிகை பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் தவிர குறைந்த அளவிலேயே வாகனங்கள் சுங்க சாவடியை கடந்து செல்கின்றன.
கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக சுங்கசாவடி ஊழியர்கள் அச்சத்துடனே பணியில் ஈடுபட்டுள்ளனர்.