இக்கட்டான சூழ்நிலையில் அரசு மக்களுக்கு நெருக்கடி தருகிறது- அன்பழகன் குற்றச்சாட்டு
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா நிவாரணமாக மஞ்சள்கார்டு தாரர்களுக்கும் அரிசி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினோம். போராட்டத்திற்கு பிறகு தற்போது இலவச அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து, கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.
ஏற்கனவே சிகப்பு கார்டுதாரர்களுக்கே இலவச அரிசி சென்றடையவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக அரிசி வழங்குவதே பலனளிக்கும். மஞ்சள்கார்டுதாரர்களுக்கு உடனடியாக அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், ரேஷன்கடை ஊழியர்களை பயன்படுத்தி விரைவாக அரிசியை வழங்க வேண்டும். கொடூர எண்ணத்துடன் புதுவை அரசு செயல்படுகிறது என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது.
இந்நிலையில் தற்போது முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு புதுவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் தரமான முக கவசம் மக்களுக்கு கிடைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு நெருக்கடியை அரசு ஏற்படுத்தக்கூடாது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் முக கவசங்களை கொடுத்து பொதுமக்களுக்கு அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அதை விடுத்து அபராதம் விதிப்பதாக கூறுவது கண்டனத்திற்குரியது. அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தவிர்த்து பிற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற முடியாமல் கஷ்டப்பட்டு வந்தனர். தற்போது புறநோயாளிகள் பிரிவு திறக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது போக்குவரத்து இல்லாதபோது மருத்துவ மனைக்கு எப்படி நோயாளிகளை அழைத்து வருவர்? ஒரே துறையில் கணவன், மனைவி பணியாற்றுபவர்கள் எப்படி பணிக்கு செல்வர்? வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தனித்தனி வாகனத்தில் செல்ல முடியுமா? மலிவான விளம்பரம் தேடும் வகையில் தினமும் ஒரு அறிவிப்பை நாராயணசாமி வெளியிட்டு வருவது கண்டனத்திற்குரியது. முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் காரில் வலம் வருகின்றனர்.
காரில் டிரைவர் இருக்கைக்கும், அமைச்சர்கள் இருக்கைக்கும் இடையில் ஒரு மீட்டர் இடைவெளி உள்ளதா? பின் சீட்டில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு மீட்டர் இடைவெளியில்தான் அமர்ந்துள்ளார்களா? நடைமுறைக்கு ஒத்துவரும் விஷயங்களை மட்டுமே செயல்படுத்த வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் வெற்று அறிவிப்புகளை அறிவிப்பதை நாராயணசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.