கொரோனா நோய் பரவி வருவதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நிவாரணம் வழங்குவது தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநில அரசுகள் பல்வேறு நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நிவாரணங்களை அறிவித்தார்.
இந்த நிலையில் புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள், கூலிவேலை செய்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு, குறு வியாபாரிகள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக சட்டசபையில் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
சட்டசபை 4-வது மாடியில் உள்ள கருத்தரங்கு அறையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, எம்.பி.க்.கள் வைத்திலிங்கம், கோகுல கிருஷ்ணன், சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் பாலன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெய மூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், அசனா.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, வெங்கடேசன், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி, தலைமை செயலாளர் அஸ்வினிகுமார், கலெக்டர் அருண், அரசு செயலாளர்கள் அன்பரசு, அசோக்குமார், சுர்பிர்சிங், பிரசாந்த்குமார் பாண்டே,
டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா, ஐ.ஜி. சுரேந்திரசிங் யாதவ் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருண் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என விளக்கி கூறினார்.
இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் ஊரடங்கு உத்தரவு அறிவித்த பிறகும் பொதுமக்கள் சுற்றி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் தமிழகம் போல நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.