செய்திகள்
தற்கொலை

வில்லியனூர் அருகே கணவர் வாங்கிய கடனுக்காக அவமானப்படுத்தியதால் பெண் தற்கொலை

Published On 2020-03-24 11:02 GMT   |   Update On 2020-03-24 11:02 GMT
வில்லியனூர் அருகே கணவர் வாங்கிய கடனுக்காக அவமானப்படுத்தியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே பங்கூர் மகாலட்மி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகள் மற்றும் ரஞ்சித்குமார் என்ற மகன் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

இதற்கிடையே ராஜேந்திரன் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் பணம் கடன் வாங்கினார். அதில், ரூ.3 ஆயிரத்தை திருப்பி கொடுத்துவிட்டார். மீதி பணம் ரூ.2 ஆயிரம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று மீனாட்சி வயல்வெளியில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தபோது கடன் கொடுத்தவர் மீனாட்சியிடம் உனது கணவர் வாங்கிய பணத்தை நீதான் கொடுக்க வேண்டும் என்று கூறி சவுக்கு கம்பால் மீனாட்சியை தாக்கி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஊர் பெரியவர்களிடம் மீனாட்சி முறையிட்டார். ஆனாலும், பணம் கொடுத்தவர் தனது உறவினருடன் மீண்டும் வந்து பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள் என்று மீனாட்சியை அவர்கள் திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மீனாட்சி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கூரையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மகன் ரஞ்சித்குமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருபுவனை பெரியபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (57). கூலித்தொழிலாளி. இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

மது குடிக்கும் பழக்கம் உள்ள அருணாசலத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சம்பவத்தன்று நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த அருணாசலம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் கைலியால் தூக்குப்போட்டு தொங்கினார்.

உடனடியாக அருணாசலத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அருணாசலம் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News