புதுவையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட தரமற்ற 2,500 முக கவசங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் தீவிரமாக பரவி வருகிறது.
இதனை தடுக்க முக கவசத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் முக கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு முக கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்து இவற்றை பதுக்குவதோ, கூடுதல் விலைக்கு விற்பதோ சட்டப்படி குற்றம் என அறிவித்துள்ளது.
இருப்பினும் அதிக தேவையை கருதி தரமற்ற, விலை அதிகமாக முக கவசங்கள் விற்பனை நடந்து வருகிறது. இது தொடர்பாக எடை அளவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து புதுவை எடை அளவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பல்வேறு மொத்த விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் வி.வி.பி.நகர் கல்கி மெடிக்கல் நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 313 முககவசம், அம்பலத்தடையார் மட வீதியில் உள்ள கவுதம் சர்ஜிகல்ஸ் நிறுவனத்தில் 500 முக கவசம், பாரதிவீதி வைஷ்ணவி சர்ஜிகல் நிறுவனத்தில் 70 முக கவசம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த முக கவசம் தரமற்று இருந்ததுடன், கூடுதல் விலைக்கும் விற்கப்பட்டது தெரியவந்தது. இந்த நிறுவனங்களின் உரிமம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு எடை அளவு கட்டுப்பாட்டுத் துறை நிர்வாகி தயாளன் கடிதம் அனுப்பியுள்ளார்.