பிரதமரின் வேண்டுகோளை ஏற்று புதுவையில் நாளை மறுநாள் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புதுவையில் நாளை மறுநாள் கடையடைப்பு- வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
பதிவு: மார்ச் 20, 2020 20:18
கடையடைப்பு
புதுச்சேரி:
புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும், நமது நாட்டு மக்களை பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு தனது முழு ஆதரவினையும், ஒத்துழைப்பையும் நல்கி வருகிறது.
கடைகளில் பணிபுரியும் ஊழியர், பொதுமக்களுக்கு முகக்கவசம் அளித்தல், பொதுமக்கள் கூடும் மார்க்கெட் பகுதிகளில் மக்கள் சுகாதாரமான கைகளை கழுவ ஏற்பாடு செய்தல் போன்ற மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய வானொலி உரையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல், இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
எனவே, மக்கள் நலனே முக்கியம் என கருதி புதுவை வணிகர்கள் கூட்டமைப்பைசேர்ந்த 85 சங்கங்களின் கடைகள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) முழுமையாக அடைக்கப்படும். மக்கள் நலன் காக்கும் அரசின் முயற்சிக்கு தார்மீக ஆதரவினை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.