செய்திகள்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

செருப்பை கழற்றச் சொன்ன விவகாரம்- சிறுவனின் பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்தார் அமைச்சர்

Published On 2020-02-07 07:45 GMT   |   Update On 2020-02-07 07:45 GMT
சிறுவனை செருப்பை கழற்ற சொன்னதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அந்த சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினரை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார்.
ஊட்டி:

முதுமலை தெப்பக்காட்டில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அங்கு சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இரு பழங்குடியின சிறுவர்களை டேய் பசங்களா இங்கே வாங்கடா.. என அழைத்து தனது செருப்பை கழற்ற சொன்னார்.

அப்போது 9-ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் குனிந்து திண்டுக்கல் சீனிவாசன் செருப்பை கழற்றினான். அந்த சமயத்தில் அங்கு வந்த அமைச்சரின் உதவியாளர் செருப்பை கழற்ற உதவினார். அமைச்சரின் செருப்பை சிறுவன் கழற்றிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த செயலுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார். ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமுக்கு கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த இரு சிறுவர்களை அழைத்து எனது செருப்பை கழற்ற சொன்னேன். எனது பேரன் போன்று இருந்ததால் அவர்களை அழைத்தேன்.

இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அந்த சிறுவர்கள் மட்டுமின்றி வேறு யாருக்கேனும் இதில் வருத்தம் இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சரின் செயலுக்கு நீலகிரி மாவட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், நீலகிரி பண்டைய பழங்குடியினர் பேரவை, மக்கள் சட்ட மையம், பழங்குடியின சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் சிறுவனும், பழங்குடியினரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மசினகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில் தனது செருப்பை கழற்றி விடுமாறு கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாய் காளி கூறியதாவது-

எனது கணவர் கடந்த 8 வருடங்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். நான் கூலி வேலைக்கு சென்று எனது மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறேன். அவன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எனது மகனை அழைத்து அவரது செருப்பை அதிகாரிகள் முன்னிலையில் கழற்ற சொல்லி உள்ளார். அவனும் கழற்றி உள்ளான். இதனால் என் மகன் அவமானத்தில் இருக்கிறான். அவன் வீட்டில் அழுது கொண்டு இருக்கிறான்.

இந்த விவகாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எனது மகனிடம் நேரில் வந்து மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் தெப்பக்காட்டில் நேற்று மாலை ஆதிவாசிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் நடவடிக்கையை கண்டித்தும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரியும் கண்டன போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூடலூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. திராவிட மணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சனைக்கு பொறுப்பு ஏற்று அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அமைச்சரின் செருப்பை கழற்றிய சிறுவன், அவரது தாய் மற்றும் பழங்குடியினர் 50-க்கும் மேற்பட்டோரை வனத்துறையினர் தங்களது வாகனத்தில் ஊட்டி விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வந்தனர். அங்கு தன் மீது போலீசில் புகார் கொடுத்த சிறுவன், அவனது தாய் மற்றும் பழங்குடியினர் நிர்வாகிகளை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சந்தித்து பேசினார். அப்போது சிறுவனின் பெற்றோரிடம் அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அப்போது நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் கிருஷ்ணகுமார் கவுசல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News