செய்திகள்
கொலை

சேத்துப்பட்டு அருகே தொழிலாளி அடித்து கொலை

Published On 2020-01-16 22:44 IST   |   Update On 2020-01-16 22:44:00 IST
சேத்துப்பட்டு அருகே முன்விரோத தகராறில் தொழிலாளியை அடித்து கொலை செய்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பெரணமல்லூர் அல்லியந்தலை சேர்ந்தவர் திருமலை என்கிற சின்ன பையன் (வயது35). கூலித் தொழிலாளி. திருமலை நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். பின்னர் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். அப்போது அரசு பள்ளி அருகே உள்ள திரவுபதி அம்மன் கோயில் வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் திருமலை பிணமாக கிடந்தார். அவரது தலையில் கல்லை போட்டு மர்ம கும்பல் கொலை செய்திருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு டி.எஸ்.பி.சுந்தரம் மற்றும் பெரணமல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மியா கொண்டு வரப்பட்டு சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து திருமலை வீட்டின் அருகே நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

கொலை குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் திருமலை குடும்பத்தாருக்கும் அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த சின்னதுரை அவரது அண்ணன் சேட்டு ஆகியோர் குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 2 குடும்பத்தாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமலை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சின்னத்துரை, சேட்டு, சேட்டுவின் மனைவி அஞ்சலி ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News